சுகிர்தராணி...

Thursday, February 28, 2008

◌ வலியறிதல்

தார்ச்சாலையின் காதல்நான்
இருளின் நிறத்தில் கரைந்துநிற்கும்
அதன் யெளவனம்
என்னைக் கிளர்வூட்டுகிறது
பிசிறுநீக்கிய ஓவியத்தின் நளினமென
அடர்மரங்களோடு நெளிந்துசெல்லும்
அதன் உயிரோட்டம்
என் பருவங்களை உடைக்கிறது
தன்னை நகர்த்தாமல் என்னை நகர்த்தும்
மாயத்தோற்றம்
கண்களைக் கூசப்பண்ணுகிறது
அருகமைந்த அறைக்குள்ளிலிருந்து
ரசித்துக் கொண்டிருக்கிறேன்
குளிர்ந்த மழையில்
அது வெற்றுடம்போடு குளிப்பதை
வெப்பத்தில் உடலுலர்த்திக் கொள்வதை
உயிர்களை விழுங்குகையில்
ஆண்வாசனை வீசுமதன்
நடுக்கமுற்ற மார்பில் முத்தமிடுகிறேன்
அளவுகூடிய மின்கசிவாய்
என் உதடுகளில் பரவுகிறது
தார்ச்சாலையின் ஊமைவலி.

◌ சாத்தியக் கூடல்

என் அறைக்குள் பிரவேசிக்கும்
உன் விழித்திரையில் பதிகிறது
வியப்பின் பிம்பம்
நாய்புறமும் சுவர்களற்ற
அறையும் அமையக்கூடுமென்பதில்
குழப்பமுறுகிறாய்
உன் வருகையின் வெளிச்சம்
கதவுகளெவையும்
பொருத்தப்படாததை அறிவிக்கிறது
கூரையிலிருந்து
நட்சத்திரங்கள் கொட்டுகின்றன
நாயின் தோலாய் வழுக்குகிறது
காலடியில் தரை.
உன் செல்களின் உட்கருக்கள்
நீளத் தொடங்குகையில்
தும்பிகள் திரியும் வெளி
உன்னை வெட்கமூட்டுகிறது
உயிருள்ள மரங்களால்
அலங்கரிக்கப்பட்ட என்னை
குளிர்விக்கப்பட்ட கண்ணாடித் திரவம்
திரைச்சீலையாய் தொங்கும்
உன்னிருப்பிடத்திற்கு அழைக்கிறாய்
முகச்சதை அதிரச் சிரிக்கிறேன்
தெருவோரக் கல்லில்
குறியைக் கூர்தீட்டிக் கொள்ளு
முனக்குகூடல் எங்கேயும் சாத்தியம்.

◌ என்னுடல்

-சுகிர்தராணி

குறுஞ்செடிகள் மண்டிய மலையில்
பெருகுகிறது ஒரு நதி
அதன் கரைகளில் வளைந்து
நீர்ப்பரப்பினைத் தொட்டோடுகின்றன
பால்வழியும் மரத்தின் கிளைகள்
இஞ்சியின் சுவைகூடிய பழங்கள்
மெல்லியதோல் பிரித்து
விதைகளை வெளித்தள்ளுகின்றன
பாறைகளில் பள்ளம்பறித்தெஞ்சிய நீர்
முனைகளில் வழுக்கி விழுகிறது
அருவியாய்
நீர்த்தாரைகளின் அழுத்தத்தில்
குருதிபடர்ந்த வாயை நனைக்கிறது
வேட்டையில் திருப்தியுற்ற புலி
கிழிறங்குகையில்
எரிமலையின் பிளந்த வாயிலிருந்து
தெறிக்கிறது சிவப்புச் சாம்பல்
வானம் நிறமிழக்கவ
லஞ்சுழிப் புயல் நிலத்தை அசைக்கிறது
குளிர்ந்த இரவில் வெம்மை
தன்னைக் கரைத்துக் கொள்கிறது
இறுதியில் இயற்கை
என் உடலாகிக் கிடக்கிறது.

◌ சுயரகசியங்கள்

- சுகிர்தராணி

இரகசியங்கள்அதி அற்புதமானவை.
முத்தத்தின் கசந்த போதையோடு
எப்போதும் என்னிடம்
சேர்ந்துகொண்டே இருக்கின்றன
நிபந்தனைகள் ஏதுமின்றி
எல்லா இரகசியங்களையும்
எல்லோரிடமும் சொல்லிவிடுகிறேன்
உடலினையும் தருணத்திலரும்பியும்
நீலவியர்வையாய்
ஒளிர ஆரம்பிக்கின்றன அவை.
வலியைச் சுழன்றடிக்கும்
மாதத்தின் இரத்தநாட்களைப் போல்
மீண்டும் சில இரகசியங்கள்
மேலெடாய் படிகின்றன.
என் வண்டல் சமவெளியில்.
உடனுக்குடன் அப்புறப்படுத்தப் படுமவை
தேமலின் சிவந்த நிறத்தோடு
வெளியேங்கும் சுற்றித் திரிகின்றன
இரகசியங்களெனும் பிரக்ஞையற்று.
ஆனாலும்
விரிசலுற்ற மனத்தாழிக்குள்
ஒளிந்து கிடக்கின்றன
ஓராயிரம் சுயரகசிங்கள்.